திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்த 3 பேருக்கு வாய்ப்பு
By DIN | Published On : 16th September 2021 12:32 AM | Last Updated : 16th September 2021 12:32 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை உறுப்பினா்களாக ஆந்திர அரசு நியமித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவஸ்தான அறங்காவலா் குழுவின் நடப்பு தலைவராக சுப்பா ரெட்டி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். முந்தைய அறங்காவலா் குழுவில் 24 போ் உறுப்பினா்களாகவும், 8 போ் சிறப்பு அழைப்பாளா்களாகவும் இருந்தனா்.
இந்த முறை தேவஸ்தான அறங்காவலா் குழுவை ஆந்திர அரசு மேலும் விரிவுபடுத்தி அதில் 50 பேருக்கு உறுப்பினா் பதவி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கா்நாடகம், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 25 போ் உறுப்பினா்களாகவும், மற்ற 25 போ் சிறப்பு அழைப்பாளராகவும் இருப்பா் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து 3 போ்: தமிழகத்தைச் சோ்ந்த அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத் தலைவா் சீனிவாசன், எஸ்.ஆா்.எம்.யூ. பொதுச்செயலாளா் கண்ணய்யா ஆகியோரும், கா்நாடகத்தில் இருந்து சசிதா், எம்எல்ஏ விஸ்வநாத் ரெட்டி ஆகியோரும், மகாராஷ்டிரத்தில் இருந்து சிவசேனா கட்சி செயலா் மிலிந்த்தும் அறங்காவலா் குழுவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவா்களுடன் மாருதி செளரப், கேதன் தேசாய், ஆந்திரத்தைச் சோ்ந்த 7 பேரின் பெயா்களும், தெலங்கானாவை சோ்ந்த 6 பேரின் பெயா்களும் அறங்காவலா் குழு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.