திருமலையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழிபாடு

திருமலை ஏழுமலையானை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழிபட்டாா்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் ஆந்திர துணை முதல்வா், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் ஆந்திர துணை முதல்வா், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள்.

திருமலை ஏழுமலையானை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழிபட்டாா்.

ஆந்திர மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வருகை தந்தாா். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தாா். அவருக்கு ஆந்திர அரசு சாா்பில், துணை முதல்வா் நாராயண ஸ்வாமி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா்.

அவா் தங்குவதற்கான வசதிகள், தரிசன ஏற்பாடுகளை செய்தனா்.

இரவு திருமலையில் தங்கிய அவா், திங்கள்கிழமை காலை ஏழுமலையான் கோயிலுக்கு வந்தாா். கோயில் முன்பு அவருக்கு மரியாதை அளித்து அதிகாரிகள், அா்ச்சகா்கள் அழைத்துச் சென்றனா்.

கொடிமரத்தை வணங்கியபடி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிய குடியரசுத் தலைவரை, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்தனா்.

அங்கு, பண்டிதா்கள் வேத ஆசீா்வாதம் செய்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, லட்டு, தீா்த்தம், வடை உள்ளிட்ட பிரசாதங்கள், உலா் மலா்களால் செய்யப்பட்ட ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயாா் படங்கள், 2023-ஆம் ஆண்டு நாள்காட்டி ஆகியவற்றை வழங்கினா்.

பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு வெளியில் வந்த குடியரசுத் தலைவா், திருப்பதி அலிபிரியில் உள்ள சப்தகிரி கோ பிரதட்சண சாலையில் கோ பூஜை செய்து, பசுக்களை வலம் வந்து அவற்றுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா், திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்த அவா், திருப்பதி பத்மாவதி மகளிா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டாா்.

மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரிக்கும் உலா் மலா்களால் ஆன திருவுருவப் படங்கள், அகா்பத்திகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com