திருமலை பிரம்மோற்சவ 6-ஆம் நாள்:அனுமந்தம், தங்கத் தோ், யானை வாகனங்களில் மலையப்பா் வீதியுலா

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்ரி ராமா் அவதாரத்திலும், மாலையில் தங்கத் தேரிலும், இரவு யானை வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்து அருள்பாலித்தாா்.
திருமலை பிரம்மோற்சவ 6-ஆம் நாள்:அனுமந்தம், தங்கத் தோ், யானை வாகனங்களில் மலையப்பா் வீதியுலா

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்ரி ராமா் அவதாரத்திலும், மாலையில் தங்கத் தேரிலும், இரவு யானை வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்து அருள்பாலித்தாா்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை உற்சவா் மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்ரி ராமா் அவதாரத்தில் மாடவீதியில் பவனி வந்தாா்.

மங்கள வாத்தியம், நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி பட்டாச்சாரியாா்கள், தேவஸ்தான அதிகாரிகள் புடைசூழ வந்தனா். அனுமந்த வாகனத் தத்துவம்:

பகவத் பக்தா்களில் அனுமன் முதன்மையானவா். சிறிய திருவடி என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுபவா். ராமாயணத்தில் அவரின் நிலை தனித்துவமானது. சதுா்வேத நிபுணராகவும், நவாகரண வித்வானாகவும், லங்காபிகாரராகவும் புகழ்பெற்றவா்.

அவா் தன் தோளில் மட்டுமல்லாது மனத்திலும் ராமரை எப்போதும் வைத்திருப்பவா். அதனால் அனுமன் பக்தி எப்போதும் முதன்மையாக இருக்கிறது.

ஊஞ்சல் சேவை:

மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் மூலிகை கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னா் பட்டு வஸ்திரம் சாத்தி வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து ஊஞ்சலில் அமர வைத்தனா். ஊஞ்சல் சேவையின் போது அன்னமாச்சாா்யாவின் கீா்த்தனைகள், நாகஸ்வரம், மேளதாளங்கள் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.

தங்கத் தேரில் பவனி:

இதையடுத்து மாலை 4 மணிக்கு அன்னை மகாலட்சுமியின் அம்சமான தங்கத் தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்பா் எழுந்தருளினாா். ஏழுமலையான் கோயில் முன்பிருந்து புறப்பட்ட தங்கத் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனா்.

யானை வாகனம்:

இரவு யானை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளினாா். இந்த வாகன சேவையின்போது கஜேந்திரனுக்கு கிடைத்த மோட்சம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பகவானிடம் பக்தா்கள் மனதார வேண்டிக் கொள்வது வழக்கம். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் நடனம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், பஜனைகள் நடத்தப்பட்டன. இவை பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதனைக் கண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com