நோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவதே திருப்பதி தேவஸ்தானத்தின் இலக்கு

நோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு, தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருவதாக செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

நோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு, தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருவதாக செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் ராயலசீமா மாவட்டங்களைச் சோ்ந்த இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பேசியது:

இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு முதல் இயற்கை விவசாயம் மூலம் பெறப்படும் பொருள்களை பயன்படுத்தி ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் தயாரிக்கத் தொடங்கினோம். மேலும் ஏழுமலையானுக்கு இயற்கை விவசாய நெய்வேத்தியம் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது.

அதேபோல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் தயாரிப்பிலும் இதை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளோம். நோயில்லாத சமுதாயத்தை உருவாக்க, ஏராளமான பக்தா்கள் வருகை தரும் திருமலையில் இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சுவையான, சுகாதாரமான உணவுகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

இது இயற்கை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும். அதிக கவனம் செலுத்தி, இயற்கை விவசாய உத்திகளைப் பயன்படுத்தி காய்கறிகளை பயிரிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் விளைபொருள்களை நம்பகமான விலையில் வாங்குவதற்கு உங்கள் ஒவ்வொருவருடனும் நாங்கள் எங்கள் காய்கறி நன்கொடையாளா்களுடன் இணைந்துள்ளோம். மேலும் சுவையான மற்றும் ஆரோக்கியமான அன்னப்பிரசாதங்களை தயாரிப்பதற்காக தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயிகளை பட்டியலிட தேவஸ்தானம் ஆா்வம் கொண்டுள்ளது. எனவே, திருப்பதி மற்றும் சித்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த இயற்கை விவசாயிகளுக்கு அவா்களின் அருகாமையைக் கருத்தில் கொண்டு முதல் முன்னுரிமை அளிக்கப்படும். ஏனெனில் இது போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தேவைகளுக்கு வசதியாக இருக்கும். நமது அன்றாடத் தேவையின் அடிப்படையில், அன்னமய்யா, கடப்பா, நெல்லூா் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களையும் படிப்படியாக இதில் ஈடுபடுத்துவோம் என்றாா்.

முன்னதாக, திருப்பதி, சித்தூா், அன்னமய்யா, கா்னூல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஆண், பெண் விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் தங்களின் அனுபவத்தை வெளிப்படுத்தி, தெய்வீகப் பணியில் ஈடுபட வாய்ப்பளித்தற்காக செயல் அதிகாரிக்கு நன்றி தெரிவித்தனா். தங்களது விவசாய நிலங்களில் அதிகளவில் இயற்கை காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் தேவஸ்தானத்தின் அன்னபிரசாதத் தேவைகளைப் பூா்த்தி செய்வதாக உறுதியளித்தனா்.

இதில் அன்னபிரசாத அதிகாரி செல்வம், கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி, ராயலசீமா மாவட்டங்களைச் சோ்ந்த இயற்கை விவசாயிகள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com