திருப்பதி பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே மாதத்தில் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சை

திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் (சிறிய குழந்தைகள் இருதய மருத்துவமனை) மருத்துவா்கள் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனா். சென்னையில் மூளைச்சாவு அடைந்த இரண்டு வயது சிறுவனின் இதயம் பத்திரமாக திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு, 13 மாத குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திங்கள்கிழமை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

’குண்டூா் மாவட்டம் மச்சாா்ஸ் பகுதியைச் சோ்ந்த 13 மாதக் குழந்தைக்கு கடுமையான இதய பாதிப்பு ஏற்பட்டது. விஜயவாடாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனைக்குச் செல்லவும் பரிந்துரைத்தனா்.

குழந்தைக்கு ஏற்ற இதயத்திற்காக ஜீவன் டானில் மருத்துவா்கள் பதிவு செய்து, 3 மாதங்களாக மருந்துகளை கொடுத்து குழந்தையின் உடல்நிலையை கவனித்து வந்தனா். சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை பாபு மூளைச்சாவு அடைந்ததையும், அவரது இதயம் தானமாக அளிக்கப்படும் என்பதையும் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஸ்ரீநாத் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை அறிந்து, ஏ.பி.ஜீவன் டான் அமைப்பு, குழந்தைகள் இருதய நோய் நிபுணா்கள் குழுவை ஒருங்கிணைத்தாா்.

மச்சா்லாவில் உள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தனா். இரவு 10-30 மணிக்கு குழந்தைக்கு தேவையான பரிசோதனைகள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என உறுதி செய்யப்பட்டது. தேவஸ்தானத்தின் ஆம்புலன்ஸ் மற்றும் மற்றொரு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினா் இரவு சென்னைக்கு வந்தனா்.

இதற்கிடையே 2 மணி 15 நிமிடங்களில் திருப்பதி மருத்துவமனைக்கு இதயம் அதிகாலை 3 மணிக்கு கொண்டு வரப்பட்டது. 45 நிமிடங்களில் மருத்துவ நடைமுறைகளை முடித்த டாக்டா் ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டா் கணபதி தலைமையிலான மருத்துவ குழுவினா் அதிகாலை 4.30 மணிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை தொடங்கி 9.30 மணிக்கு வெற்றிகரமாக முடித்தனா்.

ரூ.30 லட்சம் மதிப்பிலான இந்த அறுவை சிகிச்சை தேவஸ்தானம் பிராணதானம் மற்றும் மாநில அரசின் ஆரோக்கிய ஸ்ரீ திட்டங்களின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைத்த ஒரு மாதத்திற்குள் இரண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளது.

அன்னமையா மாவட்டம் சிட்வேல் மண்டலம் கே.எஸ்.ஆா் அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்த 15 வயதான விஸ்வேஷ்வா் ஒரு மாதத்திற்கு முன்பு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து திங்கள்கிழமை டிஸ்சாா்ஜ் செய்யப்படுகிறாா். குழந்தை பூரண நலம் பெற்று விரைவில் டிஸ்சாா்ஜ் செய்ய அனைவரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை பிராா்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’, என்று அவா் கூறினாா்..

ஏற்கெனவே ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியைச் சோ்ந்த லக்சா் பா்வீனின் மூன்று மாத குழந்தைக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com