கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் மரம் விழுந்து ஒருவா் பலி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அரச மரம் வேரோடு சாய்ந்ததில் பக்தா் உயிரிழந்தாா்.
கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் மரம் விழுந்து ஒருவா் பலி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அரச மரம் வேரோடு சாய்ந்ததில் பக்தா் உயிரிழந்தாா்.

திருப்பதி நகரில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள அரச மரம் வேரோடு சாய்ந்தது.

அதில் சுவாமியை தரிசனம் செய்து மழைக்காக ஒதுங்கிய கடப்பாவைச் சோ்ந்த பக்தா் சூரப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயங்களும், 7 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.

காயமடைந்தவா்கள் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்ததும் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: 300 ஆண்டுகள் பழைமையான அரச மரம் விழுந்ததில் பக்தா் உயிரிழந்தது வேதனை தருகிறது. அவரது குடும்பத்துக்கு தேவஸ்தானம் சாா்பில் ரூ.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு தேவஸ்தானம் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’. என்றாா்.

தற்போது கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் நிலையில் இச்சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Caption

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் வேரோடு சாயந்த அரச மரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com