திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள அம்மணி அம்மன் நினைவிடத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
செங்கம் தாலுகா, சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலபிள்ளை-ஆயி அம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அம்மணி அம்மாள். பல்வேறு சித்து வேலைகளைக் கற்றவர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை வள்ளாள மகாராஜா கட்டியபோது, கோயிலின் வடக்கு கோபுரத்தை அடிதளத்துக்கு மேல் கட்ட முடியாமல் தவித்தாராம்.
அம்மணி அம்மாள் உடனிருந்து வடக்குக் கோபுரத்தை கட்டி முடித்தாராம். எனவே, கோயிலின் வடக்கு கோபுரத்துக்கு அம்மணி அம்மன் கோபுரம் என்று பெயரிடப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. 1785-ம் ஆண்டு அம்மணி அம்மன் ஜீவ சமாதி அடைந்தார்.
அவர் ஜீவ முக்தி அடைந்த 228-வது ஆண்டான செவ்வாய்க்கிழமை, திருவண்ணாமலை கிரிவலப் பாதை, ஈசான்ய லிங்கம் எதிரே உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான வேதவிற்பன்னர்கள் கலந்து கொண்டு இந்த சிறப்புப் பூஜையை நடத்தினர். பொதுமக்கள் மற்றும் அருள்மிகு அம்மணி அம்மன் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.