திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபத்தில் கடைகள் ஒதுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட 50 கடைக்காரர்கள் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே இருந்த 16 கால் மண்டபத்தில் 1996-ல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 16 கால் மண்டபம் இடிந்து விழுந்தது. அதையொட்டியிருந்த கடைகள் எரிந்து சேதமடைந்தன.
இதையடுத்து சேதமடைந்த கடைகளை தென் ஒத்தவாடை தெருவில் அமைத்துக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியது.
தொடர்ந்து, இடிந்து விழுந்த 16 கால் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு மீண்டும் 16 கால் மண்டபம் பகுதியில் கடைகள் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில், தென்ஒத்தவாடைத் தெருவில் கடைகள் வைத்துள்ள சுமார் 50 பேர் செவ்வாய்க்கிழமை திடீர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் 16 கால் மண்டபம் பகுதியில் கடைகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.