பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
By DN | Published On : 07th October 2015 01:10 AM | Last Updated : 07th October 2015 01:10 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கே.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் உதவி இயக்குநர்கள் அக்கண்டராவ், எஸ்.ஏழுமலை, அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்து நிலைய நிழற்குடையில் நிற்க இடம் இல்லாமல் வெயிலில் நிற்கின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
வேளாண் துறையில் 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதையடுத்துப் பேசிய வட்டாட்சியர் பன்னீர்செல்வம், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறைப்படி பரிசீலிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.