சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ1.5 கோடியை வழங்கக் கோரி, திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், சேத்துப்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1.5 கோடியை வழங்காமல் வியாபாரி கார்த்தி, அவரது தந்தை சீனு, சகோதரர் கண்ணன் ஆகியோர் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இவர்களுக்கு உடந்தையாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகரன் செயல்பட்டாராம்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர், அமைச்சர், எம்எல்ஏ ஆகியோரை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர். மாவட்ட நிர்வாகம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஆகியோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தேசிய நதிநீர் இணைப்பு தென் இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, கடந்த 8-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், நல்லடிசேனை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடம் பாதிக்கப்பட்ட சேத்துப்பட்டு விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1.5 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அய்யாக்கண்ணு பேசியபோது, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். அதன்பேரில், அய்யாக்கண்ணு போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்புள்ள ரூ.2 கோடியில் இருந்து சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைச் சேர்ந்த 288 விவசாயிகளுக்கு ரூ.1.5 கோடியை அளிக்க தலைமைச் செயலகத்தில் இருந்து திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேத்துப்பட்டு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.