செய்யாறு அருகே சிதைந்த நிலையில் 7-ஆம் நூற்றாண்டின் கொற்றவை சிலை கண்டறியப்பட்டுள்ளது.
செய்யாறை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் காளி என்றழைக்கப்படும் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான கை.செல்வகுமார் கண்டறிந்துள்ளார்.
அந்தக் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கை.செல்வகுமார் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து கை.செல்வகுமார் தெரிவித்ததாவது:
குன்னத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் கொற்றவை சிலை வெட்ட வெளியில் சிதைந்த நிலையில் இருந்து வருவதை அறிந்தேன். கொற்றவை சிலை பழங்காலத்தில் வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் வழிபட்ட கடவுளாகத் தெரிகிறது.
சங்க காலத்தில் பாலை நிலத்தின் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பண்டை தமிழர் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டார். கொற்றவையே முதன்மையான தெய்வம். திருமாலின் தங்கையாக கருதுவதால் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றை தாங்கியிருப்பதாக காட்டப்பட்டது.
காலப் போக்கில் இவ்வூர் மக்கள் பெருமாளாக கருதி வழிபட்டு வருகின்றனர். பொங்கல் திருநாளில் எருதுவிடும் விழா நடத்தி, இக்கொற்றவையை சிலர் வழிபட்டு வருகின்றனர்.
முன்பு ஒரு சமயம், எருது விடும் விழாவின்போது எருது ஒன்று இறந்து போனதாகவும், அதை அங்கேயே நல்லடக்கம் செய்து அதன் நினைவாகவே இச்சிலையை பெருமாள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கொற்றவை சிலை கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு காலத்து பல்லவர் காலச் சிற்பமாகும். இந்தக் கொற்றவை சிலை வெட்ட வெளியில் எவ்வித பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி, சிதைந்த நிலையில் காணப்பட்டாலும் ஆறு கரங்களுடன், சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களுடன், அபய கடி முத்திரையுடன், எருமையின் தலைமேல் நின்ற நிலையில் காணப்படுகிறது.
கி.பி. 7 -வது, 8 -வது நூற்றாண்டு இடைப்பட்ட கால கட்டத்தில் பல்லவ மன்னர்களின் வழிவந்த விஜயவேந்தன் காலத்தில் இச்சிலை வடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
கொற்றவைச் சிலையின் அருகில் தலையின்றி சிதைந்த நிலையில் உள்ள அம்பாள் சிலையை வைத்து, கிராம மக்கள் பொங்கல் திருநாளில் வழிபாடு நடத்துகின்றனர். சிலர் குல தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








