தமிழ் தெரியாத மாணவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் தெரியாத மாணவர்களே இல்லை என்ற நிலையை அடையச் செய்ய வேண்டும் என்று
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் தெரியாத மாணவர்களே இல்லை என்ற நிலையை அடையச் செய்ய வேண்டும் என்று ஆசிரியர், ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உலக தாய்மொழி தின விழா, நூறு சதவீத தமிழ் கற்றல் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கே.இளவரசு, பிரைடு ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் பி.சுப்பிரமணியன் வரவேற்றார். இதில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
நாம் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி தான் முதல்மொழி. இதை போற்றிப் பாதுகாப்பது நமது கடமை. நூறு விழுக்காடு கற்றல் அடைவுத்திறன் அளித்த 18 ஒன்றியங்களைச் சேர்ந்த 256 ஆசிரியர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி வள்ளுவரை, பாரதியாரை ஆசிரியர்கள் வடிவில் பார்த்தேன்.
பால்வாடி வகுப்புப் பயிலும் குழுந்தைகளை 3 வகுப்புகளாகப் பிரித்து அவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை அடையாளம் கண்டறியும் திறனில் முழு அடைவுத்திறன் பெறச் செய்தால், முதல் வகுப்பு சேர்க்கையின் போது நூறு 
சதவீத தமிழ் கற்றல் அடைவுத்திறன் இலக்கு சாத்தியமாகும்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் இன்னமும் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் உள்ளனர். மேல்நிலை, இடைநிலை கல்வித் தேர்வில் தமிழில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்துள்ளனர். தொடக்க நிலையிலேயே அனைத்து மாணவர்களும் தமிழை பிழையின்றி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை சரியாகப் படிக்காததால் பிற பாடங்களிலும் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர்.
எனவே, தமிழ் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அனைத்துப் பாட ஆசிரியர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று 
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் தெரியாத மாணவர்களே இல்லை என்ற நிலையை அடையச் செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, திருவண்ணாமலையில் செயல்படும் தமிழ்மொழி சார்ந்த இலக்கிய அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், தமிழ் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான 45 நாள் தமிழ் கற்பிக்கும் கள செயல்பாட்டில் பங்கேற்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு மாநிலக் கருத்தாளர் மு.கனகலட்சுமி, ஜெயராமன் ஆகியோர் தமிழ் கற்றல் குறித்த பயிற்சி அளித்தனர்.
இதன் மூலம் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்களைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் கல்வித் துறையின் உதவியுடன் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை 45 நாள்களுக்குள் தமிழில் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படும்.
விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலைக் கல்வி) மா.ரேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com