நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்: அமமுக வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 01st April 2019 08:09 AM | Last Updated : 01st April 2019 08:09 AM | அ+அ அ- |

நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைத்து கைத்தறித் தொழில் மேம்பட கடனுதவி வழங்கப்படும் என்று கூறி ஆரணி ஒன்றியத்தில் அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன் ஞாயிற்றுக்கிழமை கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த வெட்டியாந்தொழுவம், 12புத்தூர், முள்ளண்டிரம், எஸ்.யு.வனம், சிறுமூர், அக்ராபாளையம், அடையபுலம், மெய்யூர், இரும்பேடு, ஆதனூர்,
வெள்ளேரி ஆகிய கிராமங்களில் அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
மாவட்டச் செயலர் மா.கி.வரதராஜன், முன்னாள் மாவட்டச் செயலர் சி.ஏழுமலை, எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலர் பையூர் ஏ.சந்தானம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பிரசாரத்தில் அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன் பேசுகையில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி தரமாட்டோம். அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும்.
ஆரணி பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும். நெசவாளர்களுக்கென நலவாரியம் அமைத்து கைத்தறி தொழில் மேம்பட கடனுதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.