சித்ரா பௌர்ணமி: அன்னதானம் வழங்க அனுமதி அவசியம்
By DIN | Published On : 01st April 2019 08:09 AM | Last Updated : 01st April 2019 08:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவின்போது, அன்னதானம் வழங்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறுவது அவசியம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா, ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னதானம் வழங்க விரும்புவோர் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, உரிய விவரங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய விவரங்களுடன் சமர்ப்பித்து, ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு முன் அனுமதி பெற வேண்டும்.
விண்ணப்பத்துடன் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தங்களது முகவரியை தெரிவிக்கும் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல், எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் உணவு சமைக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கும் உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. உரிய அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...