மாநில போட்டிகளில் சிறப்பிடம்: பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 01st April 2019 08:08 AM | Last Updated : 01st April 2019 08:08 AM | அ+அ அ- |

மாநில அளவிலான போட்டிகளில் 2, 3-ஆம் இடங்களைப் பெற்ற திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பாராட்டினார்.
"ஸ்கோப்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாணவ-மாணவிகளிடையே பொதிந்துள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை வெளிக்கொணர வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, 11, 12-ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியியல், வணிகவியல் பாடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் சுய விருப்பத்துக்கேற்ப தங்கள் பள்ளி, ஊர் அமைந்துள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட பொருள் சார்ந்து திட்டம் தயாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
இவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையிலான குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு பாடத்திலும் தலா ஒரு ஆய்வறிக்கை வீதம் மொத்தம் 7 ஆய்வறிக்கைகளை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தது.
மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு தாவரவியல் பாடத்தில் இரண்டாமிடமும், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு விலங்கியல் பாடத்தில் 3-ஆம் இடத்தையும் பெற்றது.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சனிக்கிழமை பரிசு, சான்று வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், சமக்கிர சிக்சா திட்டத்தின் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.