வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பட்டியல் பொருத்தும் பணி தீவிரம்
By DIN | Published On : 11th April 2019 08:58 AM | Last Updated : 11th April 2019 08:58 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பட்டியல் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்பாளர்கள் பட்டியல் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்காக 2,372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 448 வாக்குச் சாவடிகள், ஆரணி மக்களவைத் தொகுதியில் 532 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 980 வாக்குச் சாவடிகளில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி 980 வாக்குச் சாவடிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படும். மாவட்டத்தைச் சேர்ந்த 19 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி அடையாளச் சீட்டு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்குச் சாவடி அடையாளச் சீட்டுடன் வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குச் சாவடி அடையாளச் சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். அதனை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.
வாகன வசதி: திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த முறை வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களை வாக்குப் பதிவு மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், வாக்குப் பதிவு முடிந்தபிறகு மீண்டும் அழைத்து வரவும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 18,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலி, சாய்வு தளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது, திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் கு.மனோகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
வந்தவாசி: இதேபோல, ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலர் அ.ந.லாவண்யா முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப் பதிவுக்காக வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 280 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அவசர கையிருப்புக்காக 84 இயந்திரங்கள் என மொத்தம் 364 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 366 விவிபாட் இயந்திரங்கள், 354 பேலட் பேப்பர்கள் (வேட்பாளர்கள் பட்டியல்) வரப்பெற்றுள்ளன.
இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணியை 22 மண்டலத் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர் என்றார்.
வந்தவாசி வட்டாட்சியர்கள் ஆர்.அரிக்குமார், சுபாஷ்சந்தர், துணை வட்டாட்சியர்கள் அகத்தீஸ்வரன், சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.