ரூ.3 லட்சம் புகையிலை கடத்தல்: 2 பேர் கைது
By DIN | Published On : 12th April 2019 08:20 AM | Last Updated : 12th April 2019 08:20 AM | அ+அ அ- |

கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து சென்னைக்கு மினிவேனில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்திச் செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடியை அடுத்த நெக்குத்தி சுங்கச் சாவடியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில் போலீஸார் புதன்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினிவேனில் சோதனை செய்தனர். அதில் பூண்டு மூட்டைகளைக் கொண்டு செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். எனினும், சந்தேகமடைந்த போலீஸார் சாக்கு மூட்டைகளை அகற்றிப் பார்த்த போது அட்டைப்பெட்டிகளில், தடைசெய்யப்பட்ட புகையிலை (ஹான்ஸ்) கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
அந்த வேனின் ஓட்டுநரான கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், வெள்ளையன்கோடு பகுதியைச் சேர்ந்த முஸ்தஃபா(25), உடன் வந்த அதே பகுதியை சேர்ந்த ஷாகீப்(28) ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், மைசூரிலிருந்து சென்னைக்கு புகையிலையை கடத்திக் கொண்டு செல்வதாக அவர்கள் கூறினர். இதையடுத்து 40 அட்டைப் பெட்டிகளில் இருந்த புகையிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முஸ்தஃபா, ஷாகீப் ஆகிய இருவரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலை கடத்திக் கொண்டுவரப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.