"விவசாயக் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்'
By DIN | Published On : 12th April 2019 08:21 AM | Last Updated : 12th April 2019 08:21 AM | அ+அ அ- |

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி பேசினார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூதமங்கலம், வேடந்தவாடி, எரும்பூண்டி, கொத்தந்தவாடி, கருமாரப்பட்டி, பாலானந்தல், நூக்காம்பாடி, ராந்தம், வி.நம்மியந்தல், வள்ளிவாகை, குன்னியந்தல், சானானந்தல் உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, கு.பிச்சாண்டி எம்எல்ஏ பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். கிராமப்புற பெண்கள் 50 லட்சம் பேருக்கு மக்கள் நலப் பணியாளர் பணியிடம் வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.50ஆயிரம் வரை வழங்கப்படும். ஊரக வேலைத் திட்டப் பணி நாள்கள் 150-ஆக உயர்த்தப்படும் என்றார்.
வாக்குச் சேகரிப்பில், ஒன்றியச் செயலர்கள் பெ.சு.தி.சரவணன், வி.பி.அண்ணாமலை, மாவட்ட துணைச் செயலர் பாரதிராமஜெயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.