சித்திரை பௌர்ணமி: கிரிவலப் பாதையில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 17th April 2019 01:45 AM | Last Updated : 17th April 2019 01:45 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வரும் பக்தர்களுக்காகச் செய்யப்படும் பல்வேறு வசதிகள், வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்திரை பௌர்ணமி வியாழக்கிழமை (ஏப்ரல் 18) இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை மாலை
முடிவடைகிறது. அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கிரிவலப் பாதையில் பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, காவல் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கிரிவலப் பாதையில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, தற்காலிகப் பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பி.ஜெயசேகர், டிஎஸ்பி அண்ணாதுரை, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...