தேர்தலைப் புறக்கணிப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு
By DIN | Published On : 17th April 2019 07:03 AM | Last Updated : 17th April 2019 07:03 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டு அருகே ஓதலவாடி ஊராட்சியில் மணல் கடத்தலை தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காததால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போவதாக மாவட்ட ஆட்சியரகத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மனு அளித்தனர்.
சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி ஊராட்சியில் பள்ளகாலனி உள்ளது. இந்தக் காலனி அருகே செய்யாறு பாய்கிறது.
இந்த ஆற்றில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தரணி, மாட்டு வண்டியில் மணல் அள்ளியபோது, பள்ளகாலனியைச் சேர்ந்த ராமதாஸ், ராஜசேகர் ஆகியோர் அவரைத் தடுத்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சதுப்பேரியைச் சேர்ந்த தரணியின் நண்பர்களான ரமேஷ், மணி, விக்னேஷ், முனுசாமி உள்ளிட்டோருக்கும், பள்ளகாலனியைச் சேர்ந்த ராமதாஸ், ராஜசேகர், இளங்கோ உள்ளிட்டோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ராஜசேகருக்கு கத்திவெட்டு விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, சதுப்பேரியைச் சேர்ந்தவர்களையும், பள்ளகாலனியைச் சேர்ந்த இளங்கோ, ரவிச்சந்திரன், விஜயபாஸ்கர், சத்யா ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், பள்ளகாலனியைச் சேர்ந்த 4 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காததால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர். இதனால், பள்ளகாலனியைச் சேர்ந்த 378 பேருடைய வாக்குகள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளகாலனியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...