நாளை சித்திரை பௌர்ணமி: 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) சித்திரை பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) சித்திரை பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்திரை பௌர்ணமி வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 7.05 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) மாலை 5.35 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பக்தர்களுக்குத் தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சித்திரை பௌர்ணமி திருவிழா தினத்தன்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் மட்டும் 480 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர, திருவண்ணாமலை நகரில் 395 பேர், கிரிவலப் பாதையில் 402 பேர் மற்றும் ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் என மொத்தம் 1,700 பேர் சித்திரை பௌர்ணமி தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 
இந்தப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தேர்தல் பணி வழங்கப்பட மாட்டாது.
21 பாதுகாப்பு மையங்கள்: கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதை, தற்காலிகப் பேருந்து நிலையங்கள் என மொத்தம் 21 இடங்களில் நான் உங்களுக்கு உதவலாமா?' என்ற தலைப்பில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த மையங்களில் பெண் காவலர்கள் பணியில் இருப்பர். கண்டுபிடிக்கப்படும் குழந்தைகளுக்கு சாக்லெட், பொம்மைகள் கொடுத்து அவர்கள் பராமரித்து, உரியவர்களிடம் ஒப்படைப்பர். திருட்டு சம்பவங்களைக் கண்காணிக்க 22 இடங்களில் காவல் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
ஆளில்லா குட்டி விமானம்: குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கவும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் 120 இடங்கள், திருவண்ணாமலை நகரில் 80 இடங்கள், கிரிவலப் பாதையில் 89 இடங்கள் உள்பட மொத்தம் 324 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பாதுகாப்புப் பணியில் ஆளில்லா குட்டி விமானமும் ஈடுபடுத்தப்படுகிறது.
2,895 சிறப்புப் பேருந்துகள்: திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (ஏப்ரல் 18) பிற்பகல் ஒரு மணி முதல் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இணையதள கார் நிறுத்த வசதி:  திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்தி நகர் பழைய பை-பாஸ் சாலை, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், கிருஷ்ணா லாட்ஜ் அருகில், திருமஞ்சன கோபுர மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் மொத்தம் 770 கார்கள் நிறுத்தும் வகையில், கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் கார்களை நிறுத்த விரும்பு வோர்  இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 
முன்பதிவு செய்த அனுமதிச் சீட்டை கார்களின் முகப்பில் ஒட்டிக்கொண்டு வந்தால், குறிப்பிட்ட கார் நிறுத்துமிடத்தில் பக்தர்களின் கார்கள் அனுமதிக்கப்படும். வேறு காரில் அனுமதிச்சீட்டை ஒட்டி கொண்டு வந்தால், அந்தக் கார் அனுமதிக்கப்படாது.
இதுதவிர, திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளின் சந்திப்புப் பகுதிகளில் பக்தர்கள் தங்களது கார்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 55 இடங்களில் சுமார் 15 ஆயிரம் கார்களை நிறுத்தலாம் என்றார் அவர்.
பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, டிஎஸ்பி பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com