ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 26th April 2019 06:45 AM | Last Updated : 26th April 2019 06:45 AM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆவணியாபுரம் மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ தேவி பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
புதன்கிழமை பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கருடசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர்.
வியாழக்கிழமை காலை 7-ஆம் நாள் திருவிழாவான தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில் லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்புஅலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழாவில் இந்து சமய அறநிலையத் துறைச் செயல் அலுவலர் நந்தகுமார், போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரணமல்லூர், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.