இளம்பெண் தற்கொலை: 3 பேர் கைது
By DIN | Published On : 26th April 2019 01:01 AM | Last Updated : 26th April 2019 01:01 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே கள்ளக் காதல் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வெம்பாக்கம் வட்டம், திருப்பனமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராமன் (33), பச்சையம்மாள் (27) தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் பச்சையம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது. கணவர் முத்துராமன் மனைவியை கண்டித்த நிலையிலும் கள்ளத் தொடர்பு நீடித்ததாம்.
இதை அறிந்த முத்துராமன் குடும்பத்தினர் தமிழரசனை சில தினங்களுக்கு முன்பு தட்டிக் கேட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் முத்துராமன் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது மனைவியையும் அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பச்சையம்மாள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், தூசி காவல்நிலைய ஆய்வாளர் ரேகாமதி வழக்குப் பதிவு செய்து தமிழரசன், அவரது தாய் ராணி, தங்கை சைலஜா ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.