உண்டு, உறைவிடப் பள்ளியில் பழங்குடியின மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
By DIN | Published On : 26th April 2019 01:01 AM | Last Updated : 26th April 2019 01:01 AM | அ+அ அ- |

ஜவ்வாது மலை, காவலூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளியில் 6 முதல் 11-ஆம் வகுப்பு வரை பழங்குடியின மாணவ-மாணவிகளை சேர்த்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஜமுனாமரத்தூர் வட்டம், அத்திப்பட்டு அடுத்த காவலூர் கிராமத்தில் தற்காலிகமாக ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் 300 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 11-ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவ-மாணவிகள் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பள்ளியில் கல்வி பயில அனுமதிக்கப்படுவர்.
அனுமதிக்கப்படும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தரமான ஆங்கில வழிக்கல்வி, உணவு, உறைவிடம், சீருடை, கல்வி உபகரணங்கள், விடுதியில் தங்கிப் பயிலத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் கல்வி, விளையாட்டு, கல்விசார் உடல்பயிற்சிகள் வழங்கப்படும்.
பெற்றோர் தங்களது குழந்தைகளின் சாதிச் சான்று, பெற்றோரின் ஆதார் அடையாள அட்டை, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் வந்து தலைமையாசிரியர் (பொறுப்பு), ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி, அத்திப்பட்டு (இருப்பு) காவலூர், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து வழங்கலாம். மேலும், பழங்குடியினர் நல திட்ட அலுவலரை 9384047464, 9047713371 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி
தெரிவித்துள்ளார்.