கட்டட மேஸ்திரிக்கு இடது கண் அகற்றம்: திருமண மண்டப உரிமையாளர் மீது வழக்கு
By DIN | Published On : 26th April 2019 12:59 AM | Last Updated : 26th April 2019 12:59 AM | அ+அ அ- |

வேட்டவலம் அருகே திருமண மண்டபம் இடிந்து விழுந்ததில் கட்டட மேஸ்திரிக்கு கண் பார்வை பறிபோனதால், திருமண மண்டப உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி (37). இவர், வேட்டவலம் அடுத்த தளவாகுளம் கிராமத்தில் சொந்தமாக திருமண மண்டபம் கட்டி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி திருமண மண்டபத்தின் கட்டுமானப் பணி நடைபெற்றபோது கான்கிரீட் தளம் சரிந்து விழுந்து 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ராஜேந்திரன் (41) என்பவருக்கு இடது கண்ணில் ஏற்பட்ட காயத்துக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேந்திரனின் இடது கண் பார்வை பறிபோனதாகத் தெரிவித்து, கண்ணை அகற்றினர். இதையடுத்து, திருமண மண்டப உரிமையாளர்
விஜயசாரதி மீது வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.