குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 26th April 2019 01:00 AM | Last Updated : 26th April 2019 01:00 AM | அ+அ அ- |

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, ஆரணி அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த மாமண்டூர், அம்பேத்கர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கெனவே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஊராட்சிச் செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி-செய்யாறு சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த ஆரணி நகர காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, மைதிலி, உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.
ஆரணி டிஎஸ்பி செந்தில் வந்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி நேரில் வந்து பேசினால்தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறினர். பின்னர், டிஎஸ்பி செந்தில், செல்லிடப்பேசி மூலம் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு பேசி, ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அந்தப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.