சேத்துப்பட்டு தேர்தல் தகராறு: அமமுகவினர் 6 பேர் கைது
By DIN | Published On : 26th April 2019 01:00 AM | Last Updated : 26th April 2019 01:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக நகரச் செயலர் அலுவலகத்தை உடைத்தும், திமுக துணைச் செயலரின் டீ கடையை சூறையாடியும், மேலும், திமுக பிரமுகர் கார் மீது கல் வீசித் தாக்கியதாக அமமுக பிரமுகர்கள் 6 பேரை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு, பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் கடந்த 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, மாலை நேரத்தில் வாக்குச்சாவடி திமுக முகவர்களுக்கும், அமமுக முகவர்களுக்கும் இடையே வாய்த்
தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து திமுக நகரச் செயலர் முருகன், தேர்தல் பணிக் குழுவைச் சேர்ந்த இளங்கோவன், சேகர், பன்னீர், தண்டபாணி என்கிற குட்டி, விஷ்ணு உள்பட 100-க்கும் மேற்பட்ட திமுகவினர், அமமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அன்றே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போளூர் டிஎஸ்பி பிரகாஷ்பாபு, காவல் ஆய்வாளர் நரசிம்மன் ஆகியோர் அமமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
தேர்தல் தகராறில் திமுக கொடுத்த புகாரின் பேரில் அமமுகவைச் சேர்ந்த பூபாலன் (32), கமல் (28), சரவணன்(35), திருமலை (21) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், சேத்துப்பட்டு போலீஸார் அமமுகவினரை வியாழக்கிழமை கைது செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பழம் பேட்டை மார்க்கெட் கமிட்டி அருகேயுள்ள திமுக துணைச் செயலர் தண்டபாணி என்கிற குட்டியின் டீ கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர். பின்னர், எதிரே இருந்த திமுக பிரமுகர் கன்னியப்பன் கார் மீது கல் வீசித் தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஆரணி சாலையில் உள்ள திமுக நகரச் செயலர் முருகன் அலுவலக கண்ணாடி மீது கல்வீசித் தாக்கினர்.
இது குறித்து திமுக நகரச் செயலர் முருகன், துணைச் செயலர் தண்டபாணி என்கிற குட்டி, திமுக பிரமுகர் கன்னியப்பன் மனைவி தேவி ஆகியோர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை தனித்தனியாக அமமுகவினர் மீது புகார் செய்தனர்.
இதையடுத்து, டிஎஸ்பி பிரகாஷ்பாபு, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நரசிம்மன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து திமுக பிரமுகர்கள் அலுவலகம் மற்றும் கடை மீது தாக்குதல் நடத்தியதாக அமமுக பிரமுகர்களான பூங்காவனம் (55), கோதண்டம் (53), பூபாலன் (32), கமல் (28), திருமலை (21), சரவணன் (35) ஆகிய 6 பேரை கைது செய்து போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.