பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 26th April 2019 06:46 AM | Last Updated : 26th April 2019 06:46 AM | அ+அ அ- |

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலும், பள்ளி இடைநிற்றல் மாணவர்களையும் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி ஆகிய ஊராட்சியில் உள்ள இருளர் காலனி மற்றும் நிலத்திலேயே தங்கியிருப்பவர்கள் என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ப.தேன்மொழி, கோ.குணசேகரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
மேலும், மல்லவாடி ஊராட்சியில் இருளர் காலனியில் காளியப்பன்-செல்வி தம்பதியின் மகன் சக்திவேல் (7) பள்ளி இடைநிற்றல் மாணவர் என்பதைக் கண்டறிந்து மல்லவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்கை செய்தனர். மேலும், இதுவரை பள்ளிசெல்லா குழந்தைகள் 6 முதல் 17 வயது வரை என 24 மாணவர்களைக் கண்டறிந்துள்ளனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் தோறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ப.தேன்மொழி, கோ.குணசேகரன் ஆகியோர் சென்று அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி என கல்வியின் தரம் குறித்தும், எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர்க்கை விவரம் குறித்தும் துண்டுப் பிரசுரங்களை பொது
மக்களிடம் வழங்கினர்.