நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 04th August 2019 12:43 AM | Last Updated : 04th August 2019 12:43 AM | அ+அ அ- |

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நீப்பத்துறை அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தினசரி இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, தென்பெண்ணையாற்றில் தேங்கியிருந்த நீரில் புனித நீராடி, கோயிலில் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு, பெங்கல் வைத்து, சென்னியம்மனுக்கு படைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும், குழந்தைகளுக்கு காதணி விழா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் வெ.செல்வரங்கன், வெ.கோகுலவாணன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.