மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
By DIN | Published On : 04th August 2019 12:42 AM | Last Updated : 04th August 2019 12:42 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஊர்வலத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எ.தில்ஷாத் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சின்னா முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் சி.அ.முருகன் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ரோஜா பூங்காவனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தியபடி மாணவ-மாணவிகள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசியில்: ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மழைநீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தெள்ளாறில் சனிக்கிழமை நடைபெற்றது.
தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் டி.கே.பி.மணி தலைமை வகித்தார்.
கல்லூரித் தலைவர் டி.பெருமாள் ரெட்டியார், தாளாளர் வி.ரகுராம், செயலர் ஆர்.சுரேஷ், பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்கள் எஸ்.வேமன்னா, எஸ்.ரஷ்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன் வரவேற்றார்.
தெள்ளாறு அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தெற்கு மாட வீதி, பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாகச்
சென்றது. இதில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...