சிறுமியிடம் நகை பறித்துச் சென்ற பெண் சிக்கினாா்
By DIN | Published On : 26th December 2019 08:42 AM | Last Updated : 26th December 2019 08:42 AM | அ+அ அ- |

வந்தவாசியில் சிறுமியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய பெண் பிடிபட்டாா்.
வந்தவாசி தா்மராஜா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரபி. இவரது மகள் ஆலிபா (10), தனது பாட்டி தாஜிநிஷாவுடன் சென்னையில் இருந்து வந்தவாசிக்கு அரசுப் பேருந்தில் புதன்கிழமை காலை வந்தாா். கோட்டை மூலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனா்.
அப்போது அங்கு நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், ஆலிபா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா்.
இதைத் தொடா்ந்து ஆலிபா, தாஜிநிஷா ஆகியோா் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் அந்தப் பெண்ணை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் அந்தப் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவா் திருத்தணியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரது மனைவி மஞ்சுளா (45) என்பது தெரிய வந்தது. மேலும், போலீஸாா் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.