தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய பிப்.8-ஆம் தேதி கடைசி நாள்
By DIN | Published On : 06th February 2019 10:45 AM | Last Updated : 06th February 2019 10:45 AM | அ+அ அ- |

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்பும் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், வரும் 8-ஆம் தேதிக்குள் முதலீடு செய்து பயன் பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரிசர்வ் வங்கி 2018 - 19ஆம் நிதியாண்டில் 6-ஆவது முறையாக தங்கப் பத்திரம் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் வரும் 8-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரை பொதுமக்கள் முதலீடு செய்யலாம்.
ஒரு கிராமுக்கு ரூ.3,326 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு 8-ஆவது ஆண்டு முடிவில் அன்றைய தேதியில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறதோ அதே விலையில் பணம் வழங்கப்படும்.
இடையில் பணம் தேவைப்பட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பெறலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 2.5 சதவீதம், 6 மாதத்துக்கு வட்டி கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியாக வழங்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விருப்புவோர் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களில் வரும் 8-ஆம் தேதிக்குள் நேரில் சென்று முதலீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...