கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான வேளாண்மை ஆண்டுத் திட்டம் குறித்த பயிற்சி முகாமின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசுகையில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் செயல்படும் மகளிர் குழுக்கள், அதன் உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், தொழில் திறன் மேம்பாடு குறித்து விளக்கினார்.
மேலும், விவசாயம் சார்ந்த குறுகிய கால, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்து, அதிக மகசூல் ஈட்டி, அதன் மூலம் லாபம் அதிகரிக்கவும், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் அரசுத் துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கும் நோய்த் தடுப்பு உத்திகளை கையாண்டு, அதன் மூலம் பால் பொருள்கள்
அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.
இதன் மூலம் மகளிர் குழுவினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்று மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் அறிவுரை வழங்கினார்.
பயிற்சி முகாமில், ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி, களப்பகுதி வழிநடத்துனர்கள், பல்வேறு ஊராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.