சாதிச்சான்று கோரி பழங்குடி, இருளர் சமுதாய மக்கள் மனு
By DIN | Published On : 04th January 2019 09:47 AM | Last Updated : 04th January 2019 09:47 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை நகரில் வசிக்கும் பழங்குடி, இருளர்சமுதாய மக்கள், தங்களுக்கு சாதிச்சான்று வழங்கக் கோரி, கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை பே கோபுரத் தெரு, கீழ்நாத்தூர், பெருமாள் நகர் பகுதிகளில் பழங்குடி, இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாதிச்சான்று இதுவரை வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக, அவர்களது பிள்ளைகள் உயர் கல்வி பயில முடியாத நிலை உள்ளது. எனவே, தங்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை மனு அளித்தனராம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி தங்கராஜ் தலைமையில் பழங்குடி, இருளர் சமுதாய மக்கள் பலர் வியாழக்கிழமை திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், தங்களுக்கான சாதிச்சான்று வழங்கக் கோரி, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரியிடம் முறையிட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.