பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th January 2019 09:50 AM | Last Updated : 04th January 2019 09:50 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேரணி சோமாசிபாடியில் நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சோமாசிபாடி ஊராட்சியின் பல்வேறு தெருக்களில் பேரணியாகச் சென்று பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், பள்ளி நிர்வாக அலுவலர் வீரமணி, பள்ளி முதல்வர் மிதுன் கார்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ஊராட்சிச் செயலர் சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.