வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் விவசாயிகள் மறியல்
By DIN | Published On : 04th January 2019 09:47 AM | Last Updated : 04th January 2019 09:47 AM | அ+அ அ- |

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் கொண்டுவரும் கோணிப்பைகளை சரிவர திரும்ப வழங்காததைக் கண்டித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில்
விவசாயிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி அரசு மருத்துவமனை அருகில் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது.
வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கோணி மூட்டைகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வருவர். அங்கு, எடைபோட்ட பின்னர், வியாபாரிகளின் கோணிப்பைகளில் நெல் மாற்றப்பட்டு, காலி கோணிப்பைகளை அன்றே விவசாயிகளிடம் திருப்பி கொடுத்துவிடுவராம்.
ஆனால், கடந்த சில தினங்களாக காலி கோணிப்பைகள் விவசாயிகளுக்கு சரிவர தரப்படவில்லையாம். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை என புகார் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காலி கோணிப்பைகளை வழங்காததைக் கண்டித்தும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீஸார், சமரசம் செய்ததை அடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனால், வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.