8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் உண்ணாவிரதம்

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச்சாலை அமைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். 
எனவே, இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
4 இடங்களில் உண்ணாவிரதம்: இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.
தச்சம்பாடி, நார்த்தம்பூண்டி சர்ச் அருகில், செங்கத்தை அடுத்த மண்மலை, ஆரணியை அடுத்த நம்பேடு ஆகிய இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
மண்மலை: செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, கட்டமடுவு, மேல்ராவந்தவாடி, மேல்புழுதியூர், மேல்வணக்கம்பாடி, மண்மலை, செ.நாச்சிப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, மண்மலை கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விநாயகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயப் பெண்கள் கூறியதாவது: 8 வழிச் சாலைக்காக முன்னோர்கள் எங்களுக்கு அளித்த விவசாய நிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். அதையும் மீறி 8 வழிச் சாலை அமைக்கப்பட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து பசுமை வழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தச்சாம்பாடி: இதேபோல, சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் போளூர் - சேத்துப்பட்டு சாலை அருகே  எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் அருள் தலைமை வகித்தார். இதில், ஆத்துரை, தச்சாம்பாடி, ராந்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பசுமை வழிச் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
நார்த்தம்பூண்டி, நம்பேடு ஆகிய பகுதிகளில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சிவா, சவுந்தர், தேவன் உள்ளிட்டோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com