ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றிய வாகனம் செல்வதில் சிக்கல்
By DIN | Published On : 07th January 2019 09:55 AM | Last Updated : 07th January 2019 09:55 AM | அ+அ அ- |

380 டன் எடை கொண்ட ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றப்பட்ட கனரக வாகனம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், திருவண்ணாமலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, கனரக வாகனம் செல்ல ஏதுவாக திருவண்ணாமலை நகரில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் இருந்து 108 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை அண்மையில் வெட்டி எடுக்கப்பட்டது. இந்தப் பாறையை பிரத்யேக லாரி மூலம் கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்குக் கொண்டு சென்று அங்கு பிரம்மாண்டமான ஸ்ரீகோதண்டராமர் சிலை செய்ய பெங்களூரில் உள்ள தனியார் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதி பெற்று 380 டன் எடையுடன் கூடிய பாறையில் கோதண்டராமர் முகம் வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து, 240 சக்கரங்கள் கொண்ட கனரக லாரியில் ஏற்றப்பட்ட பாறை கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் இருந்து புறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை வழியாக சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலை சந்திப்புப் பகுதிக்கு அருகே கனரக லாரி வந்தது. இரவு நேரம் என்பதால் சனிக்கிழமை இரவு முழுவதும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
சிறிது தூரம் மட்டுமே சென்றது: ஞாயிற்றுக்கிழமை காலை கனரக லாரி புறப்பட்டது. ஆனால், திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் உள்ள திருக்கோயிலூர் - வேலூர் சாலை மேடாக இருந்ததால், லாரியால் ஏற முடியவில்லை. மேலும், சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரும் கனரக லாரி செல்ல தடையாக இருந்தது தெரியவந்தது.
எனவே, சிறிது தொலைவு நகர்ந்து சென்ற கனரக லாரி, மீண்டும் அவலூர்பேட்டை சாலை சந்திப்புப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த பல ஆயிரம் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று கோதண்டராமர் சிலையை பார்வையிட்டு, வழிபட்டனர்.
தடுப்புச் சுவர்கள் அகற்றம்:
இதற்கிடையே, பாறை ஏற்றப்பட்ட கனரக லாரி செல்ல திட்டமிடப்பட்டுள்ள வழிநெடுகிலும் உள்ள தடுப்புச் சுவர்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்த பிறகு திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை கனரக லாரி புறப்பட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது.
அவலூர்பேட்டை சாலையில் உள்ள கனரக லாரியை திருவண்ணாமலை - திண்டிவனம் சாலைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், எல்ஐசி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பெரியார் சிலை, மத்தலாங்குளத் தெரு, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சாலைகள் வழியாக கிரிவலப் பாதைக்கு கொண்டு சென்று அங்கிருந்து செங்கம் சாலையில் கொண்டு சேர்க்க நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை திட்டமிட்டுள்ளன.