செய்யாறு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
By தே.சாலமன், செய்யாறு | Published On : 03rd July 2019 09:36 AM | Last Updated : 03rd July 2019 09:36 AM | அ+அ அ- |

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செய்யாறில் அரசு மருத்துவமனை 1969 -இல் சுமார் 2.58 ஏக்கர் பரப்பில் 32 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. 1974-இல் 64 படுக்கைகளுடனும், 2000-இல் 126 படுக்கை வசதியுடனும் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது.
தலா ரூ.10 கோடியில் இரு கட்டடங்கள்.. மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக 2018-முதல் செயல்படத் தொடங்கியது. சுமார் ரூ.10 கோடியில் 3 அடுக்குமாடிகள், தானியங்கி வசதியுடன் 226 படுக்கைகள் வசதிகொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டது.
அதனுடன் விபத்து சிகிச்சைக்கொன்று தனிப் பிரிவும் தொடங்கப்பட்டது. நிகழாண்டில் மகப்பேறுக்கென்று ரூ.10 கோடியில் புதிய கட்டடம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
வார்டுகள் விவரம்: மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், காப்பீட்டுத் திட்டம், முதியோர் நலன், சிறுநீரகம், மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள், சி.டி.ஸ்கேன் பிரிவு, கண் மருத்துவம், மன நலம், அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பரிவு என 15-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.
அறிவிப்போடு நிற்கும் மையம்: விபத்துக்கொன்று தனிப் பிரிவாக 6 படுக்கைகள் வசதியுடன் தாய் மையம் தொடங்கப்பட்டது. இங்கு எம்.டி, மருத்துவர், அறுவைச் சிகிச்சை நிபுணர் என 6 மருத்துவர்கள், செவிலியர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரிவுக்கு இதுவரை ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.
மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை: செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 1200 பேர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 45 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 19 பேர் உள்ளதாக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. இவர்களில் எம்.டி மருத்துவர் மாவட்ட இணை இயக்குநராகவும், அறுவைச் சிகிச்சை நிபுணர் வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், மன நல மருத்துவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கும், கண் மருத்துவர் ஆரணி, வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ள மருத்துவர்களை வைத்துத்தான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
எம்.டி. மருத்துவர், அறுவைச் சிகிச்சை, சிறுநீரகம், இருதயம், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை என சிறப்பு மருத்துவர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
மாதத்துக்கு 100 முதல் 120 பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனையில் குறைந்தது 6 மகப்பேறு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் இந்த (ஜூலை) மாதத்தில் ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிகிறது.
6 பேர் பணிபுரிய வேண்டிய மருந்தகத்தில் 2 பேர் மட்டுமே உள்ளனர். கட்டுகட்டும் பிரிவில் 10 பேரில் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கட்டுகட்டும் பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. 75 }க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 45 பேர் மட்டுமே உள்ளனர்.
பயனில்லாத மருத்துவ உபகரணங்கள்: மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் சி.டி.ஸ்கேன், ரூ.6 லட்சம் மதிப்பில் அல்ட்ரா சவுண்ட் (4 இயந்திரங்கள்), ஸ்கேனர் போன்ற மருத்துவ உபகரணங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த தனியாக பயிற்சி பெற்ற மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களைக் கையாளுவதற்கு பயிற்சி பெற்ற வல்லுநர்கள், உதவியாளர்களும் நியமிக்கப்படவில்லை.
கை கொடுக்கும் 108 ஆம்புலன்சு : ரூ.10 கோடியில் கட்டடம், பல லட்சம் மதிப்பிலான மருத்துவக் கருவிகள் இருந்தும் அதற்கென தனியாக மருத்துவர்கள், நிபுணர்கள் நியமிக்கப்படாததாலும், மகப்பேறு மருத்துவர் உள்பட உரிய மருத்துவர்கள் இல்லாததாலும், இந்த மருத்துவமனைக்கு இருதயக் கோளாறு, விபத்து மற்றும் பிரசவம் என வரும் நோயாளிகள் 108 அவசரகால ஊர்தி மூலம் செங்கல்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை போன்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொ) பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மருத்துவமனை நிலவரம் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மருத்துவமனையில் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதது குறித்து தெரிவித்துள்ளோம். இருவரும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...