ஜமாபந்தி: தண்டராம்பட்டு வட்டத்தில் 10 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 09th June 2019 12:02 AM | Last Updated : 09th June 2019 12:02 AM | அ+அ அ- |

தண்டராம்பட்டு வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி முதல் நாளில் 10 பேருக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட வழங்கல் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ஹரிதாஸ் வழங்கினார்.
தண்டராம்பட்டு வட்டத்துக்கான ஜமாபந்தி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வட்டாட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். பறக்கும் படை வட்டாட்சியர் சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ஹரிதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
முதல் நாளான வெள்ளிக்கிழமை தண்டராம்பட்டு உள்வட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சிறு விவசாயிச் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 434 மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இவற்றில் 10 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை ஜமாபந்தி அலுவலர் ஹரிதாஸ் வழங்கினார். விழாவில், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாரதி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.