பெரணமல்லூர் ஒன்றியத்தில் சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகம்
By DIN | Published On : 09th June 2019 12:01 AM | Last Updated : 09th June 2019 12:01 AM | அ+அ அ- |

பெரணமல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 80 சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சனிக்கிழமை வழங்கினார்.
பெரணமல்லூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கீழ், சுமார் 97 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சத்துணவு மேலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
அலுவலக மேலாளர் சீனுவாசன் வரவேற்றார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, ஒன்றிய அளவில் சுமார் 80 சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை வழங்கிப் பேசுகையில்,
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை வரிசையில் நிற்க வைக்காமல், கீழே அமர வைத்து உணவு பரிமாற வேண்டும் என்றார்.
இந்த சுகாதாரப் பெட்டகத்தில், பணியாளர்கள் சத்துணவு மையங்களுக்குச் செல்லும் முன்பு தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான கிருமி நாசினி சோப்பு, நகங்களை வெட்ட நகவெட்டி, தலைமுடி கீழே உதிராமல் இருக்க தொப்பி, பாதுகாப்பு உடை, துண்டு உள்ளிட்ட பொருள்கள் அடங்கியிருந்தன.
நிகழ்ச்சியில் சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.