விவசாய நிலங்களில் மின் கம்பங்கள்: கண்டித்து மறியல்
By DIN | Published On : 09th June 2019 12:00 AM | Last Updated : 09th June 2019 12:00 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டதைக்
கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வந்தவாசியை அடுத்த சென்னாவரம் துணை மின் நிலையத்திலிருந்து சத்தியவாடிக்கு மின்பாதை அமைப்பதற்காக செம்பூர், அத்திப்பாக்கம், சோகத்தூர், நல்லூர் கூட்டுச்சாலை, தெய்யாறு, பெரியகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மின் கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.
செம்பூர் கிராமத்தில் உள்ள சிலரது விவசாய நிலங்களில் சில மின் கம்பங்கள் நடப்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டதைக்
கண்டித்து, அந்தக் கிராமத்தில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வந்தவாசி - தெய்யாறு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி (பொறுப்பு) பழனி, நல்லூர் துணை மின் நிலைய உதவிப் பொறியாளர் பழனி உள்ளிட்டோர் அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.