குடிநீர் பிரச்னையில் மெத்தனம்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 14th June 2019 07:26 AM | Last Updated : 14th June 2019 07:26 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியில் குடிநீர் பிரச்னையில் மெத்தனமாக செயல்பட்டதாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியில் கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், அவதிக்குள்ளான அந்தப் பகுதி மக்கள் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார்களை சீரமைக்காததும், கடந்த 10 நாள்களாக குடிநீர்ப் பிரச்னை இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஊராட்சிச் செயலர் ராஜா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர், தனிஅலுவலர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, ஊராட்சிச் செயலர் ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். உத்தரவின் நகலை தனி அலுவலர் ந.பிரகாஷ் வியாழக்கிழமை ஊராட்சிச் செயலர் ராஜாவிடம் வழங்கினார். மேலும், சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி செயலர் பொறுப்பு, நொச்சிமலை ஊராட்சி செயலர் சந்திரசேகரனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.