

தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
வந்தவாசியில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை அறிமுகப்படுத்தி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
சில நாள்களுக்கு முன் அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமது வெற்றியின் தொடக்கமாகும். கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளை நினைத்துக்கொண்டு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் களத்தில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவைத் தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். அதிமுக அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றார்.
பின்னர், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், பாமக மாநில துணைத் தலைவர் மு.துரை, பாஜக மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், தேமுதிக மாவட்டச் செயலர் ஆ.கோபிநாதன், தமாகா நிர்வாகி தாமோதரன் உள்ளிட்டோர் தேர்தல் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.