குடிசை வீட்டில் தீ விபத்து: 15 பவுன் தங்க நகைகள் சேதம்
By DIN | Published On : 22nd March 2019 09:35 AM | Last Updated : 22nd March 2019 09:35 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஆண்டி (60). இவரது இளைய மகன் சங்கரின் மனைவி சரண்யாவுக்கு புதன்கிழமை மாலை அதே கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்காக, வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் திருமண மண்டபத்துக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், இரவு 9 மணிக்கு ஆண்டியின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீ பரவியதில் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து பொன்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...