உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு: பறிமுதல் பணம் ரூ.15 லட்சம் ஒப்படைப்பு
By DIN | Published On : 28th March 2019 09:40 AM | Last Updated : 28th March 2019 09:40 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 750 உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, 24 பறக்கும் படைகள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பறக்கும் படைகள் சார்பில் ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 32-ம், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ரூ.18 லட்சத்து 47 ஆயிரத்து 490-ம் என மொத்தம் ரூ.46 லட்சத்து 96 ஆயிரத்து 522 பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், இந்தப் பணத்தில் இதுவரை ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 750 உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.31 லட்சத்து 53 ஆயிரத்து 712-ஐ கொண்டு வந்தவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர ரூ.90 ஆயிரத்து 985 மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...