தண்டராம்பட்டு பகுதியில் சுவர் விளம்பரங்கள் ஆய்வு
By DIN | Published On : 30th March 2019 09:16 AM | Last Updated : 30th March 2019 09:16 AM | அ+அ அ- |

தண்டராம்பட்டு வட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வரைந்துள்ள சுவர் விளம்பரங்களை தேர்தல் உதவி செலவினப் பார்வையாளர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் வரையும் சுவர் விளம்பரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சுவர் விளம்பரங்கள் வரைய ஆகும் செலவு குறித்து கணக்கெடுக்க தொகுதி வாரியாக தேர்தல் உதவி செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி, செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு, சாத்தனூர், தரடாப்பட்டு, கொழுந்தம்பட்டு, கீழ்வணக்கம்பாடி, வாழவச்சனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆர்.பாபு தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பாக்கியராஜ் (கொட்டையூர்), வெங்கடேசன் (சாத்தனூர்) ஆகியோரைக் கொண்ட குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
அப்போது, சுவர் விளம்பரங்கள் எவ்வளவு அளவில் வரையப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் எழுத ஆகும் செலவினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களைக் கணக்கெடுத்து அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஆர்.பாபு தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...