கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு திட்டித் தாக்குவதாக பெண் அளித்த புகாரின் பேரில், போளூர் மகளிர் போலீஸார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர் நடேசன் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன், கமலாதேவி தம்பதி மகன் ராம்குமார் (30). சென்னை குன்றத்தூர் தேவகி நகரைச் சேர்ந்த சந்தியா (28). இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து கடந்த 2013-ஆம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர், ராம்குமார் ஜவுளிக்கடை வைப்பதற்கு சந்தியாவின் 35 பவுன் நகையை அடகு வைத்தும், சந்தியாவின் அண்ணன் சரவணனிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றாராம்.
இதற்கிடையே, ராம்குமார் தாய் கமலாதேவிக்கும், சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராம்குமார், சந்தியா இருவரும் சென்னை குன்றத்தூரில் உள்ள சந்தியாவின் தாய் வீட்டில் தங்கினர். தொடர்ந்து, ராம்குமார் அடிக்கடி போளூர் வந்து தாய், தந்தையை பார்த்துவிட்டும் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், தாய், தந்தையை பார்ப்பதற்காக போளூர் வந்த ராம்குமார் சென்னை திரும்பாமல் இருந்து விட்டாராம்.
இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்தியா போளூர் வந்து ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டதாகத் தெரிகிறது. அப்போது ராம்குமார், சந்தியாவை அடித்து ஜாதி பெயரைச் சொல்லித் திட்டி ,மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
மேலும், ராம்குமாரின் தந்தை வெங்கடேசன், தாய் கமலாதேவி, தங்கை இந்திரா ஆகியோரும் சேர்ந்து சந்தியாவிடம் வரதட்சிணை கேட்டு அடித்து விரட்டினராம்.
இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சந்தியா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் ராம்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், வெங்கடேசன், கமலாதேவி, இந்திரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.