பெருமாள் கோயில்களில் கருடசேவை
By DIN | Published On : 19th May 2019 10:00 AM | Last Updated : 19th May 2019 10:00 AM | அ+அ அ- |

வைகாசி விசாகத்தையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் கருடசேவை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை விழா கொடியேற்றத்துடன் கடந்த
14-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
5-ஆம் நாளான சனிக்கிழமை காலை 6 மணியளவில் கோபுர தரிசனம் நிகழ்ச்சி மற்றும் மகா கருடசேவை விழா நடைபெற்றன. இதையொட்டி, ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு போளூர் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் தங்கி நாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழாக் குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
மற்ற ஊர்களில்...: இதேபோல, ஆரணி கொசப்பாளையம் ராமர் கோயில், ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில், செய்யாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் கருடசேவை விழா நடைபெற்றது. இதையொட்டி, கருட
வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தது.