மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம்
By DIN | Published On : 19th May 2019 10:00 AM | Last Updated : 19th May 2019 10:00 AM | அ+அ அ- |

செய்யாறை அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடப்பு ஆண்டில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் பல மாற்றங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள 91 வருவாய்க் கிராமங்களில் மொத்தம் 1,456 மண் மாதிரிகளை சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தில் விவசாயி பெருமாளின் வயலில் நவீன முறையில் மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சி.மாரியப்பன் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது, விவசாய நிலத்தில் சதுர வடிவில் வெட்டப்படும் குழியில் 25 செ.மீ. ஆழத்தில் ஒரு மண் மாதிரியும், 25 - 50 செ.மீ. அழத்தில் மேலும் ஒரு மண் மாதிரியும் தனித்தனியாக சேகரித்து, அதனுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் மண்ணின் நிறம், மண் வகை, கடினத்தன்மை, அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடி வகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறிக்கப்பட்ட மண் மாதிரிகள், ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆழமாக உள்ள மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் சுண்ணாம்பு போன்ற தீங்கு விளைவிக்கும் மண் வகைகளைக் கண்டறிந்து, ஆழமான வேர்கள் கொண்ட பயிர்களை அந்தப் பகுதியில் பயிர் செய்வதை தவிர்க்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என சி.மாரியப்பன் தெரிவித்தார்.